விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாமாத்தூரில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "தற்போது விசிக ரவிக்குமாரையும், கடந்த சட்டமன்ற தேர்தலில் புகழேந்தி ஆகியோர் வெற்றி பெற்றது போல, இம்முறை அன்னியூர் சிவாவை குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். பின்னர், விக்கிரவாண்டி தொகுதியில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்த தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார். அவை பின்வருமாறு:-
- விக்கிரவாண்டியில் 3 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் நீதிமன்றம் கட்டப்படும்.
- ரூ.18 கோடி மதிப்பீட்டிலான கட்டுமானப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
- விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் விரைவில் திறக்கப்படும்.
- முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.62 கோடியில் கட்டப்படும் உயர்மட்ட மேம்பாலம் விரைவில் முடிக்கப்படும்.
- சாத்தனூர் அணையின் உபரிநீர், நந்தன் கால்வாயில் விடப்பட்டு விக்கிரவாண்டி தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பனமலைப்பேட்டை ஏரியில் கலக்கும் விதமாக திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்' என்று கூறினார்.
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், அரசு நிறைவேற்றிய திட்டங்களாக கூறியவை பின்வருமாறு:-
'நந்தன் கால்வாய் திட்டம் 75% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அன்னியூர் ஊராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு புதிய காத்திருப்போர் கூடம் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
அதேபோல், எண்ணாயிரம் ஊராட்சியில் புதிய கால்நடை மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. எண்ணாயிரம் ஊராட்சியில் அனைத்து வசதிகளுடன் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. எண்ணாயிரம் ஊராட்சியில் புதிய வேளாண்மை தானியக்கிடங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாம்பழப்பட்டு முதல் மல்லிகைப்பட்டு வரை, அகரம் சித்தாமூர் முதல் காணை குப்பம் வரை, காங்கேயனூர் முதல் பள்ளியந்தூர் வரை உள்ள பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளன. வீடூரில் இருந்து குழாய் மூலமாக விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி பேரூராட்சியில் புதிதாக 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
ரூ.6 கோடி மதிப்பீட்டில் வீடூர் அணைக்கட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய உழவர் சந்தை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையான நல்லாபாளையம் ஊராட்சியில் மூங்கில்பட்டு ஓடைப்பாலம் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி பேரூராட்சியில் வெங்கடேஸ்வரா நகரில் 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்து. இப்படி பல்வேறு திட்டங்களான புதிய மின்மயானம், புதிய பேருந்து நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில சாதனைகளை மட்டும் சொல்லியுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அரசியலில் விஜய்க்கு எனது ஆதரவு கண்டிப்பாக இருக்கும்' - பரியேறும் பெருமாள் பட நடிகை பேட்டி - Kayal anandhi about vijay politics