சென்னை: சென்னையில் கடந்த மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இவ்வழக்கில் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை விசாரணைக்கு பின் போலீசார் சிறையில் அடைத்தனர். விசாரணையில், இவர் சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரனின் மகன் என்பதும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் சதி திட்டம் தீட்டியதும், கொலையாளிகளுக்கு பண உதவி செய்ததும் தெரியவந்தது.
இதனிடையே அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என செம்பியம் தனிப்படை போலீசார் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்பட்டது. இதனையடுத்து அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஆக.13) வந்த போது, பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், அஸ்வத்தாமனை நான்கு நாட்கள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் செம்பியம் தனிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அஸ்வத்தாமனை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்த அழைத்து சென்றுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தையை காவலில் எடுக்க சென்னை போலீஸ் திட்டம்! - Armstrong murder case