டெல்லி: நாட்டில் உள்ள 540க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 80,000 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த முறை நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. நீட் தேர்வில் 1,563 மாணவர்கள் தேர்வில் நேர இழப்பைச் சந்தித்து உள்ளனர். அவர்களுக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கியுள்ளது. அந்த மாணவர்களின் தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்வதற்காக 4 பேர் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நான்கு பேர் கொண்ட குழுவில் முன்னாள் யுபிஎஸ்சி தலைவர் மற்றும் மூன்று கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நேரத்தை இழந்ததால் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்கள் பற்றி எழுப்பப்பட்ட பரிசீலனைகளை இந்த நிபுணர்கள் குழு ஆராயும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வுக்குழு சனிக்கிழமைக்குள் தீர்வை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை சத்தீஸ்கர், மேகாலயா, சூரத், ஹரியானா, பஹதுர்கர் மற்றும் சண்டிகர் என 6 மையங்களில் 1,563 மாணவர்களுக்கு நேர இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய தேர்வு முகமை ஜூன் 4ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இந்த முறை நாடு முழுவதும் 67 மாணவர்கள் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தனர். இதில் தேர்வு நேரத்தை இழந்ததற்காக பல தேர்வு மையங்களில் உள்ள மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கியுள்ளது. அதேபோல், இயற்பியல் கேள்விக்கான விடை தவறாக இருந்தால் அதற்கும் கருணை மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற 67 மாணவர்களில் 44 பேருக்கு இந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு - மகாராஷ்டிரா அமைச்சர்: நீட் தேர்வினால் மகாராஷ்டிரா மாநில மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா அமைச்சர் ஹசன் முஷ்ரிப் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறும் போது, "நீட் தேர்வு பணம் பெற்றுக் கொண்டு நடத்தப்பட்டு இருக்கலாம். மகாராஷ்டிராவில் உள்ள எந்த மாணவரும் அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் சேர முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்னை குறித்துப் பல மாணவர்களின் பெற்றோர் தன்னை அணுகியதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வு முடிவுகள் மகாராஷ்டிராவிற்கு அநீதியை ஏற்படுத்தியதாகவும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி நேற்று கூறும் போது, "நீட் தேர்வில் எழுப்பப்படும் புகார்களுக்கு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது என குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது ஒரே மையத்தில் முழு மதிப்பெண்களை 6 மாணவர்கள் பெற்றது பல கேள்விகளை எழுப்பப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் போது, "நீட் நுழைவுத் தேர்வு சமூக நீதிக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது" என தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்வு முகமை (NTA): நீட் தேர்வில் முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளது. மேலும், என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் நேரத்தை இழப்பதற்கான கருணை மதிப்பெண் மட்டும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு சில காரணங்கள் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு மார்க்சிய சிந்தனை தடையாக உள்ளது" - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! - RN Ravi about Marxism