சேலம்: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று, சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளில் 10 சதவிகிதம் அளவுக்கு கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவிகிதம் நிறைவேற்றி விட்டதாக ஸ்டாலின் ஊர்தோறும் பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் இதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காவிரி நதி நீர்ப் பிரச்சினை இன்னும் தீரவில்லை, மேகதாது பகுதியில் அணை கட்டியே தீர்வோம் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. இதனை திமுக அரசு கண்டுகொள்வதில்லை.
அதேபோல, விலைவாசி 40 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்து விட்டது. அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், சொத்துவரி உயர்வு, குப்பைக்கு வரி, மின் கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. 2014ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால், அதிக வரியைப் போட்டு மக்கள் மீது சுமையைச் சுமத்தியுள்ளனர்.
அதனால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மத்திய அரசுக்கு அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் அத்தியாசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி நதி நமது ஜீவநதி: சுமார் 20 மாவட்ட மக்களுக்கு ஜீவ நதியாக உள்ளது, காவிரி. திமுக அரசு முறையாக அணுகாத காரணத்தால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், பாஜக - காங்கிரஸ் ஆகிய 2 தேசிய கட்சிகளும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகும் ஆபத்துள்ளது. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் தண்ணீர் தரமாட்டோம் என்று ஆணவத்தோடு பேசி வருகிறது. இந்தியா கூட்டணியில் பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஸ்டாலின் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. எனவே, இந்த பிரச்னைகளை எல்லாம் தீர்க்க மாணவர்கள், இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும்.
தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பலன்?: தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அதிகமான நிதியைப் பெற்றுள்ளன. திமுக ரூ.560 கோடி நிதியைப் பெற்றுள்ளது. மேலும், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதால் எந்த பலனுமில்லை. பேரிடர் காலத்தில் போதுமான நிதியை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கவில்லை. வாக்கு அரசியலுக்காகவே பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மக்கள் எதிர்பார்க்கும் அமோக வெற்றியைப் பெறும்.
உச்ச நீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பலன்? தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க சொந்த காலில் தனித்து நிற்கிறோம். தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், அந்த சூழலில் யாருக்கு ஆதரவளிப்போம் என்ற நிலைப்பாட்டைத் தெரிவிப்போம். தற்போது, டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கியது கூட தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை. அதிமுகவை அழித்துவிடுவோம் என்பது வெற்று வார்த்தை, வீண்கனவு" எனத் தெரிவித்தார்.