மயிலாடுதுறை: நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபுவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று (ஞாயிறு) மயிலாடுதுறை சின்ன கடைவீதி பகுதியில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "மக்கள் தான் எஜமானர்கள் நீங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. நீங்கள் கொடுக்கின்ற தீர்ப்புதான் இறுதியானது. வேளாண் மக்கள் அதிகம் வாழ்கின்ற பகுதி மயிலாடுதுறை. விவசாயிகளுக்கான பல திட்டங்களை அதிமுக அரசு கொண்டுவந்தது.
அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் எடைபோட்டு பார்த்து, யார் ஆட்சி சிறந்தது என்பதை பார்த்து தேர்தலில் வாக்களியுங்கள். கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா கூறியது போன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினோம்.
கரோனா காலத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.12,110 கோடி பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்தோம். விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்தவன் நான். ஆனால் மு.க.ஸ்டாலின் அப்படிப்பட்டவர் அல்லை. அவரது தந்தை முதலமைச்சராக இருந்தவர். அதனால் மக்களின் கஷ்டம், பிரச்னைகள் என்ன என்பது அவருக்கு தெரியாது" என பேசினார்.
நான் இன்றும் விவசாயிதான்: தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆட்சிக் காலத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தந்தோம். அதை தற்போது நிறுத்திவிட்டனர். நான் இப்போதும் விவசாயம் செய்து வருகிறேன். எனவே, விவசாயிகள் கஷ்டங்கள் என்ன என்பது எனக்கு புரியும். செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர் மு.க.ஸ்டாலின்.
அவருக்கு விவசாயிகளின் கஷ்டங்கள் புரியாது. காவிரி நதி நீர் பிரச்சினைக்காக நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவரது வழியில் தொடர்ந்து விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தித்தந்தது அதிமுக அரசு. குறிப்பாக கர்நாடக அரசு மாதந்தோறும் 177.2 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என்ற தீர்பையும் வழங்கி இருந்தது.
அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாத திராணியற்ற முதலமைச்சராக உள்ளார் மு.க.ஸ்டாலின். கடந்த 2023ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட்டதைத் தொடர்ந்து, தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஐந்தரை லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர்.
ஆனால், கர்நாடக அரசுக்கு மு.க.ஸ்டாலின் உரிய அழுத்தம் தராத காரணத்தால் நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இங்கே குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் வாடும் நிலையில், இந்தியா கூட்டணி கூட்டத்துக்காகப் பெங்களூரு சென்ற மு.க.ஸ்டாலின் கர்நாடகா அமைச்சர்களை சந்தித்தபோது காவிரி நீர் பற்றி எதுவும் பேசவில்லை.
டெல்டா மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைகள் வராத வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, சட்டம் இயற்றியது அதிமுக. மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது திமுக அரசு. அதனைத் தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு. விவசாயிகள் பாதிக்கப்படும் போதெல்லாம் கை கொடுக்கும் அரசாக அதிமுக அரசு இருந்தது" எனக் கூறினார்.
ஆளுநரிடம் வழங்கிய புகார்கள்: திமுக அரசின் ஊழல் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தோம் அவர் விசாரிக்கவில்லை. அப்படி விசாரித்திருந்தால் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வந்திருக்கும். அதிமுக ஆட்சியின் போது திமுகவினர் ஆளுநரிடம் புகார் கொடுத்தார் அப்போது ஆளுநர் நல்லவராக தெரிந்தார். தற்போது அவர் கெட்டவராகத் தெரிகிறார்.
எடப்பாடி பழனிசாமி பகவிற்குப் பயப்படுகிறார் என்று கூறுகின்றனர். அதிமுகவினர் யாருக்கும் பயப்படுபவர்கள் இல்லை. அதிமுகவினர் அனைவரும் எம்ஜிஆர் பயிற்சி பட்டறையில் படித்த மாணவர்கள் அதிமுகவினர். தமிழக மக்களுக்கு பிரச்னை வந்தால் அதனை உடைக்க பாடுபடுவோம். கூட்டணியில் இருந்தவரை கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தோம். கூட்டணிக் கட்சிகளுக்கு மரியாதை கொடுத்து இணைந்து பணியாற்றுவோம்.
அதிமுகவின் திட்டத்திற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதா? மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டம் அமைக்கப்பட்டது. நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைக்கு மு.க.ஸ்டாலின் பெயர் வைத்து கொள்வதா
நாங்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கின்றனர். அதிமுக ஆட்சியில் புதிய மாவட்டத்தை உருவாக்கி அதற்கான கட்டடத்தை நாங்கள் தந்தோம். அண்மையில் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த அக்கட்டடம் நாங்கள் தந்தது. பூம்புகாரில் மீன்பிடித் துறைமுகம், மீன் இறங்குதளம், மீனவர்கள் வலைகளைப் பாதுகாக்க கட்டடம் என ரூ.360 கோடி மதிப்பீட்டில் கொண்டு வந்தது அதிமுக.
தரங்கம்பாடியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித்துறை துறைமுகம், ஆதனூர்-குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.450 கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய பாலம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நிறைவேற்றித் தந்தது அதிமுக அரசு என்றார்.
இதையும் படிங்க: சமோசா முதல் சிக்கன் பிரியாணி வரை.. வேட்பாளர் எவ்வளவு செலவு செய்யலாம்?