மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அதிமுக வேட்பாளர் டாக்டர். சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "மதுரை அதிமுகவின் எஃகு கோட்டை. இதில் வேறு யாரும் நுழைய முடியாது. நாளை முதல் இன்னும் வேகமாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். சிந்தாமல், சிதறாமல் இரட்டை இலைக்கு வாக்களிக்க, அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். மதுரை நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஒன்றும் செய்யவில்லை.
அவரை ஏன் நாடாளுமன்றத்திற்கு மதுரை மக்கள் திரும்ப அனுப்ப வேண்டும்? மத்திய அரசுக்கு நாம் அழுத்தம் கொடுத்ததால்தான், காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டோம்? இங்கு ரோட்டில், உதயநிதி செங்கலைக் காட்டி என்ன பிரயோஜனம்? உங்கள் 38 எம்.பி-க்களும், தில்லு திராணியோடு நாடாளுமன்றத்தில் செங்கலைக் காட்டி இருந்தால், இங்கு எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டி முடிக்கப்பட்டு இருக்கும்.
தோல்வி பயத்தால், நாங்கள் பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்திருப்பதாக மு.க.ஸ்டாலின் சொல்கிறார். கள்ள உறவு வைத்திருப்பதாக உதயநிதி பேசுகிறார். கள்ள உறவு வைப்பது, உங்களுக்குத்தான் வழக்கம். ஊழல் செய்வதில், சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதில், போதைப்பொருள் நடமாட்டத்தில், கடன் வாங்குவதிலும் என அனைத்திலும், திமுக அரசால் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. பி.டி.ஆர் ஆடியோவில் சொன்னதுபோல, முப்பதாயிரம் கோடி லஞ்சப் பணத்தை முதலீடு செய்யத்தான் வெளிநாடு செல்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஏன் வெளிநாடு சென்று முதலீட்டாளர்களை சந்தித்துப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறீர்கள்? சென்னைக்கு அழைத்துப் போட வேண்டியதுதானே. உங்க வெளிநாடு பயணம் குறித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை அமைப்போம். மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, திமுக ஓட்டுக் கேட்கவில்லை. மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருந்தால், கொள்ளையடிக்க நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பதால்தான் ஓட்டுக் கேட்டு வருகிறார்கள்.
செய்த சாதனைகளைக்கூறி உங்களால் ஓட்டு கேட்க முடியுமா? நாடாளுமன்றத்தில் தில்லு திராணியோடு அழுத்தம் கொடுத்து, தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டுவர அதிமுகவால்தான் முடியும். என்னை விமர்சிப்பதற்காகவா, உதயநிதியை விளையாட்டுத்துறை அமைச்சர் ஆக்கினார்கள்? மத்தியில் கூட்டணி ஆட்சியில் 12 ஆண்டுகள் இருந்த திமுக, தமிழக பிரச்னைகளுக்கு என்ன தீர்வு கண்டது? இப்போது உங்களுக்குத் திரும்ப ஓட்டுப் போட்டு என்ன பிரயோஜனம்?
அரசு நிகழ்ச்சிக்கு மோடி வந்தபோது, கருப்புக் குடைக்குப் பதிலாக வெள்ளைக்குடை பிடித்தவர்தான், மு.க.ஸ்டாலின். வெள்ளைக்குடை ஏந்திய பொம்மை வேந்தர் என மு.க.ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டலாம். சட்டமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த 520 தேர்தல் வாக்குறுதிகளில், 10 சதவிகிதத்தைக் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. 2019, 2021 தேர்தல்களில் நீட் தேர்வு ரத்து என்றார்கள்.
இப்போது, 2024-ல் நீட் தேர்வு ரத்து என்கிறார்கள். மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான், 2010-ல் நீட் தேர்வு வந்தது. இப்போது ஒன்றும் தெரியாததுபோல, வேஷம் போடுகிறார்கள். அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டுவதும், ஸ்டிக்கர் ஒட்டுவதும்தான் திமுகவின் வேலையாக இருக்கிறது.
தமிழக மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க, தமிழகத்திற்கு நல்ல திட்டங்களைப் பெற அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிப்பெறச் செய்யுங்கள். அதிமுக ஆட்சியில் மதுரை மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ரூ.1,200 கோடியில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம்.
நாற்பது ஆயிரம் கோடி ரூபாயை, கரோனா காலத்தில் மக்களுக்காக செலவு செய்தோம். மக்களுக்கு நல்ல பல திட்டங்களைக் கொடுத்தோம். ஆனால், மக்களுக்காக எதுவும் செய்யாமல், எங்கள் மீதும் எங்கள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்குகள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது, திமுக" எனப் பேசினார்.
இதையும் படிங்க: "வந்து பாருங்கள் மோதி பார்க்கலாம்” - பட்டாசு தொழிலை காக்க திமுக குரல் கொடுக்கவில்லை என சிவகாசியில் ஈபிஎஸ் பேச்சு! - EPS In Sivakasi