சென்னை: மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற நிதி நிறுவனத்தை தேவநாதன் யாதவ் நடத்தி வருகிறார். தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி உறுதி என கவர்ச்சியான விளம்பரம் செய்ததை நம்பி, தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரம் பேர் நிரந்தர வைப்புத் தொகை திட்டத்தில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத்தொகை மற்றும் வட்டிப் பணம் முறையாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி முதலீட்டாளர்கள் பலரும் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரசாத் என்பவர் அளித்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் 144 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.24.5 கோடி பெற்று ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, திருச்சியில் வைத்து இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதன் யாதவை கைது செய்தனர். மேலும், இதே மோசடி வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர்களான குணசீலன் மற்றும் மகிமைநாதன் ஆகியோரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தி.நகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகள் என 12 இடங்களில் சோதனை மேற்கொண்டு, ரூ.4 லட்சம் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, சோதனையின் முடிவில் நிதி நிறுவனத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்துச் சென்றுள்ளனர். மேலும், மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் மீது 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ள நிலையில், மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவின் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது, தேவநாதன் யாதவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, தலைமறைவாக உள்ள நிதி நிறுவனத்தின் மேலும் சில இயக்குனர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரூ.10 கூல்டிரிங்ஸ் விவகாரம்; சேலத்தில் தனியார் குளிர்பான ஆலைகளில் அதிரடி சோதனை!