கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ பிரபுவின் தந்தை ஐயப்பா தியாகதுருகம் ஒன்றிய துணை சேர்மனாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பிரபுவின் தந்தை ஐயப்பா அவருடைய மனைவி தைலம்மாள் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 1) ஐயப்பா தியாகதுருகத்திற்கு தொடர்புடைய எட்டு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபுவின் மைத்துனர் வழக்கறிஞர் சுபாஷ் வீட்டிலும் ஐந்து பேர்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விழுப்புரத்தில் உள்ள பிரபுவின் மைத்துனர் வழக்கறிஞர் சுபாஷ் வீட்டிலும் ஐந்து பேர்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ பிரபு தொடர்புடைய 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை முடிந்த பின்னரே, இந்த புகார் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபு கடந்த 2011-16 வரை கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பண்ருட்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நேற்று முன்தினம் (பிப்.28) லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நடத்துவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமரின் தமிழக வருகையால் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது: வானதி சீனிவாசன் பதிலடி!