திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சங்கரய்யா தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வேலம்மாள் (54). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த முருகன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதையடுத்து, கருணை அடிப்படையில் முருகனின் மனைவி வேலம்மாளுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. தற்போது அவர், விக்கிரமசிங்கபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று (பிப்.22) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, இன்று (பிப்.23) காலை அம்பாசமுத்திரத்தில் உள்ள வேலம்மாள் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி எஸ்கால் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான அவரது பணிக் காலத்தில், சுமார் 45 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வரை அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டு, அது தொடர்பாக தற்போது சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரையில் போதைப்பொருள் பதுக்கலா? - போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனை!