சென்னை: தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் 2014 ல் ஆட்சிக்கு வந்த போதே கச்சத்தீவை மீட்பது குறித்து பாஜக பேசியிருக்க வேண்டும் எனவும், தற்போது தேர்தல் அறிவித்த பின்னர் பேசுவதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என சென்னை தொகுதிக்குட்பட்ட ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று (ஏப்.04) பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகை கவுதமி பேசியுள்ளார்.
தென்சென்னை தொகுதியில் அதிமுக சார்பாக வேட்பாளர் ஜெயவர்த்தன் போட்டியிடும் நிலையில், அவரை ஆதரித்து அதிமுக தலைமை கழக பேச்சாளரும், நடிகையுமான கவுதமி திறந்தவெளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், “மக்களால் நான், மக்களுக்காகவே நான், என்று வாழ்ந்து மறைந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. மாநிலத்தின் பாதுகாப்பிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பதவியிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்றினார்களா, என்று எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்.
அண்மைக்காலமாகத் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து உள்ளதால், ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 2014 ல் ஆட்சிக்கு வந்த பாஜக கடந்த 10 ஆண்டுகளாகக் கச்சத் தீவு குறித்துப் பேசாமல் இருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், கச்சத்தீவு குறித்துப் பேசுவது தமிழக மக்களிடையே எடுபடாது. தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் 2014 ல் ஆட்சிக்கு வந்த போது, கச்சத் தீவு குறித்துப் பேசியிருக்க வேண்டும்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதால், மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது அதிகரித்துள்ளது. திமுகவின் முக்கிய தலைவர் ஒருவருக்கு நெருக்கமான ஒருவர்தான் போதைப் பொருளைத் தமிழகத்தில் புழக்கத்தில் விட்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிட வேட்பாளர்களே கிடைக்காததால் தான், இரண்டு மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்த தமிழிசை சவுந்தரராஜனை ராஜினாமா செய்ய வைத்து, தென்சென்னை தொகுதியில், பாஜக தலைமை போட்டியிட வைத்துள்ளது. இது தான் பாஜகவின் நிலையாக உள்ளது”, என அவர் பேசியுள்ளார்.