சென்னை: ஜெர்மன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம். இந்த விமான நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமான நிறுவனத்தில் சமீப காலமாக ஊதிய உயர்வு கேட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். அதனால் நாடு முழுவதும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று ஒரு நாள் மீண்டும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஜெர்மன் நாட்டில் உள்ள ஃபிராங்க்பர்ட் நகரிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை தினமும் இயக்கி வருகிறது. நள்ளிரவு 11.50 மணிக்கு ஃபிராங்க்பர்டிலிருந்து சென்னை வரும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மீண்டும் அதிகாலை 1.50 மணிக்கு, சென்னையிலிருந்து ஃபிராங்க்பர்ட் நகருக்கு புறப்பட்டுச் செல்லும்.
அதேபோல் நேற்று இரவு 11.50 மணிக்கு ஃபிராங்க்பர்ட் நகரிலிருந்து 268 பயணிகளுடன் லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. ஆனால் சென்னையிலிருந்து இன்று அதிகாலை 1.50 மணிக்கு ஃபிராங்க்பார்ட் நகருக்கு புறப்பட வேண்டிய லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்படாமல் ரத்து செய்யப்பட்டது. லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் சென்னையிலிருந்து ஃபிராங்க்பர்ட் நகருக்கு சுமார் 280க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிப்பதாக இருந்தனர். அவர்களுக்கு விமான நிறுவனம் ஏற்கனவே இணையதளம் மற்றும் செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பியதால் பெரும்பாலான பயணிகள் விமான நிலையத்திற்கு வரவில்லை.
ஆனாலும் தகவல் கிடைக்காத பயணிகள் பலர் சென்னை விமான நிலையத்திற்கு வந்துவிட்டு தகவலை அறிந்து திரும்பிச் சென்றனர். ஃபிராங்க்பர்ட் நகருக்கு, தினமும் இயக்கப்படும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரோம், ஏதேன்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இணைப்பு விமானமாக இருப்பதால் இந்த விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: பிரபல கட்டுமான நிறுவனத்தின் மீதான பண மோசடி வழக்கு; அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!