தருமபுரி: பென்னாகரம் அருகே உள்ள புகழ்பெற்ற ஒகேனக்கல் அருவி தென்னிந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரை காணவும் அருவிகளில் நீராடவும் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த சுற்றுலா தளத்தை நம்பியே ஒகேனக்கலை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார சூழல் அமைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாகவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து 300 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் எல்லாம் வெளியே தெரிகிறது. பரந்து விரிந்த காவிரி ஆறு தற்போது தண்ணீர் இன்றி கருங்கல் பாறைகளாக காட்சியளிக்கிறது.
தற்போது அருவியில் குளிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வரும் சுற்றுலா பயணிகள் நீர் வரத்து குறைவால், ஆங்காங்கே குட்டை போல தேங்கி நிற்கும் தண்ணீரில் குளித்துவிட்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ஒகேனக்கல் மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து குறைந்த அளவே காணப்படுகிறது. மேலும், ஐவர் பவனி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
கோடை காலம் என்பதாலும், கர்நாடக பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததன் காரணமாகவும் நீர் வரத்து கடுமையாக சரிந்துள்ளது. இந்த நீர்வரத்து மேலும் குறைந்தால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக எடுக்கப்படும் தண்ணீரில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் நீர் வரத்து குறைவால், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனா். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வரவு படிப்படியாக குறைந்து வருகிறது. கோடை விடுமுறை சுற்றுலாவை நம்பியே உள்ள நிலையில் இங்குள்ள பரிசல் ஓட்டிகள், உணவு சமைப்பவர்கள் போன்ற சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி டெல்டா விவசாயிகள் கடந்த வாரம் தஞ்சை, திருவாரூரில் போராட்டம் நடத்தினர். அதேநேரத்தில் காவிரியில் தமிழகத்திற்கான நீரை திறந்துவிடக்கோரி காவிரி மேலாண்மை வாரியத்தில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், அணையில் நீர் இல்லை என கர்நாடக அரசு பதிலளித்து வருவது குறிப்பித்தக்கது.