சென்னை: சென்னை எம்ஆர்சி நகர் சத்தியதேவ் அவன்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன். இவர் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டில் சரவணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கார் ஓட்டுநர் சரவணனின் செயல்பாடுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்ததாகவும், அதனால் கடந்த 27ஆம் தேதி அவரை கோபாலகிருஷ்ணன் பணியிலிருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கோபாலகிருஷ்ணனின் வீட்டில் இருந்த லாக்கர் சாவியைக் காணவில்லை என தேடியுள்ளார்.
அதனை அடுத்து, ஒரு டெக்னீசியனை வரவைத்து லாக்கரை உடைத்து பார்த்தபோது, அதிலிருந்த 250 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள், 25 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. மேலும், அவற்றின் மொத்த மதிப்பு 2 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.
பின்னர், இச்சம்பவம் தொடர்பாக கோபாலகிருஷ்ணன் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது வீட்டில் டிரைவராக பணியாற்றிய சரவணன் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், அசோக் நகரைச் சேர்ந்த டிரைவர் சரவணனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், சரணவன் கொள்ளையடித்தது தெரியவந்ததை அடுத்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தகாத உறவால் வாலிபர் அடித்துக் கொலை; 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது!
இதனிடையே, சென்னை திருவல்லிக்கேணியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் நடத்திவரும் செல்போன் கடையில், இன்று அதிகாலையில் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த 15க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்டுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, கடையின் உரிமையாளர் சுரேந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஐஸ் ஹவுஸ் போலீசார், கொள்ளையடிக்கப்பட்ட கடையில் பதிவான கைரேகைகளை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை போக்சோ வழக்கு; பணி ஓய்வுக்கு முந்தைய நாளில் சஸ்பண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்..!