சென்னை: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று (புதன்கிழமை) காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய் துறையின் தனிப்படை பிரிவினர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளியே வரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, ஏர் ஏசியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கி, பயணிகள் வெளியில் வரத் தொடங்கினர்.
அப்போது, இரண்டு குழந்தைகளுடன் வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு தம்பதியினர் மீது சந்தேகித்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மலேசியாவிற்கு வீட்டு வேலைக்காகச் சென்றதாகவும், தற்போது வேலை பிடிக்காததால், திரும்பி வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த காரணம் குறித்து அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதனையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அவர்களுடைய உடைமைகளைச் சோதித்தனர்.
சோதனையில் அவர்களது உடைமைகளில் எதுவும் இல்லாததால், அவர்களை தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று முழுமையாகப் பரிசோதித்தனர். அப்போது, தம்பதிகள் 4 பேரும் அவர்களின் உள்ளாடையில் தலா ஒரு கிலோ தங்கம் என மொத்தம் 4 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதன் பின்னர், 4 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் அவர்கள் கடத்தி கொண்டுவந்த தங்கக் கட்டிகளை யாரிடம் கொடுப்பதற்காகச் சென்னை கொண்டு வந்தனர் என்றும், இவர்கள் இதுபோன்ற தங்கம் கடத்தலில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளனரா என்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 23 வகையான நாய்களுக்கு உடனே கருத்தடை செய்க; தமிழக அரசு அதிரடி உத்தரவு!