கோயம்புதூர்: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மழையின்றி வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டம் அன்னூர் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருவதோடு, தண்ணீரின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், லக்கேபாளையம், கோவில்பாளையம் ஊர் மக்கள் கூடி, மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பஞ்ச கல்யாணி திருமணம் செய்வது என முடிவெடுத்தனர். இதன்படி, லக்கேபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையம் ஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டன.
அதன்படி, இன்று சுப்பிரமணியர் கோயிலில் கழுதைகளுக்கு திருமணம் நடைபெற்றது. பெண் கழுதைக்கு புடவை கட்டி, வளையல், பாசி அணிவித்து, லிப்ஸ்டிக் மற்றும் நெயில் பாலிஸ் பூசி அலங்கரிக்கப்பட்டது. அதேபோல், ஆண் கழுதைக்கு வேஷ்டி மற்றும் துண்டு அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.
இதனை அடுத்து, கோயிலில் பூஜை செய்யப்பட்ட பின்னர், மேளதாளம் முழங்க பெண் கழுதைக்கு தாலி அணிவிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. மேலும், திருமணத்திற்கு வந்தவர்கள் மொய்ப்பணம் கொடுத்துச் சென்றனர். அவர்களுக்கு கம்பங்கூழ் வழங்கப்பட்டது. மனிதர்களுக்கு திருமணம் நடைபெறுவது போலவே, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலும், இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், "கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான வறட்சி நிலவிய போது, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்ததை தொடர்ந்து மழை பெய்தது. மனிதர்களுக்கு எப்படி திருமணம் செய்து வைப்போமோ, அந்த முறைப்படி திருமணம் நடத்து இருக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மண்பானையில் தண்ணீர் வைத்து மக்கள் தாகத்தை தீர்த்து வரும் காவல் ஆய்வாளர்! - Summer Water Camps In Chennai