சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாதது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இன்று (ஏப்ரல் 29) திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேசுகையில், “நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் கடந்த 27ஆம் தேதி 20 நிமிடங்கள் கேமராக்கள் வேலை செய்யவில்லை.
இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி சில விளக்கத்தை அளித்துள்ளார். தொடர்ந்து கேமராக்கள் வேலை செய்து வந்ததின் காரணமாக மின் இணைப்பு பிரச்சனை ஏற்பட்டு பழுது ஏற்பட்டது என்று தெரிவித்திருந்தார். சிசிடிவி கேமராக்கள் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் முழுமையாகச் செயல்பட வேண்டும்” என்றார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் சிசிடிவினுடைய காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூம் சுற்றிலும் 500 மீட்டர் தொலைவில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் பிரச்சனை ஏற்பட்டிருந்தாலும் எங்கள் முகவர்கள் அங்கு சென்று பார்த்த போது பாதுகாப்பு அறையில் சீல்கள் அகற்றப்படவில்லை என்று தெரியவந்தது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகள் ஈடுபட வேண்டும்.
அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து முழுமையாகச் செயல்பட வேண்டும் என்பதைத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளோம்” என தெரிவித்தார்.