தென்காசி: கடையநல்லூர் நகரில் பிரபலமான பெரிய பள்ளிவாசல் தர்கா ஒன்று உள்ளது. அந்த பள்ளிவாசலில் கந்தூரி விழா நேற்று முந்தைய தினம் (ஜன.23) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, நேற்று 2வது நாள் தீப உற்சவம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் வருகை தந்து பள்ளிவாசலுக்குள் சென்று வழிபாடு செய்து விட்டு வருவது வழக்கம்.
அதனடிப்படையில், நேற்றைய தினம் திமுக சார்பில், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலன் தலைமையில், முன்னாள் மாவட்டச் செயலாளர் மா.செல்லத்துரை, கடையநல்லூர் நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் உட்பட ஏராளமானோர் வருகை புரிந்தனர். இவர்களை வரவேற்பதற்காக கடையநல்லூர் நகரச் செயலாளர் அப்பாஸ் பள்ளிவாசல் முன்பாக தன்னுடைய ஆதரவாளருடன் நின்றிருந்தார்.
அப்பொழுது திமுகவைச் சேர்ந்த சிலர் நகரச் செயலாளர் அப்பாஸிடம் தலைமை கழகத்தால் தீபாவளி பொங்கல் பண்டிகை என்பது பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை ஏன் வழங்கவில்லை எனக் கூறி, நகரச் செயலாளர் அப்பாஸிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பேச்சு வார்த்தை முத்திய போது, ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டனர்.
மேலும், தற்போது கடையநல்லூரில் திமுக நகர கழகம் 4 கோஷ்டிகளாக செயல்பட்டு வரும் சூழலில், அதில் உச்சக்கட்டமாக முஸ்லிம்கள் கொண்டாடும் கந்தூரி விழாவில் பள்ளிவாசல் முன்பு அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் அடித்துத் தாக்கிக் கொண்ட சம்பவம் அநாகரிக செயல் என இஸ்லாமியர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த நிலையில், திமுகவினர் உச்சக்கட்ட பூசலில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.