சென்னை: சென்னை வண்டலூர் பகுதியில் கடந்த 29 ஆம் தேதி புதிதாகக் கட்டப்பட்டிருந்த பேருந்து நிலையத்தைப் பார்வையிட வந்த, காட்டாங்குளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதனை(56) கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 8 நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி, பட்டா கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பியோடினர்.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்க அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடிவந்தனர்.
இந்தநிலையில் கடந்த ஒன்றாம் தேதி சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆராமுதன்கொலை வழக்கு தொடர்பாக நான்கு பேர் சரணடைந்தனர். இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நான்கு பேர் சரணடைந்தனர். இதையடுத்து ஓட்டேரி போலீசார் நீதிமன்றத்தில் சரணடைந்த எட்டு நபர்களையும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், வண்டலூர் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆராமுதன் ஊராட்சி மன்ற தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த முறை வண்டலூர் ஊராட்சி, பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டதால் வண்டலூரைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி என்பவர் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவியாக வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால், ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் முத்தமிழ் செல்வி, ஊராட்சியிலும் முக்கியத்துவம் அளிக்காமல் அனைத்து மரியாதைகளும் ஆராமுதனுக்கு மட்டுமே கிடைப்பதால், முத்தமிழ் செல்வி விரக்தியில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதேபோல, தொடர்ந்து தான் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்த அவர், ஆராமுதனைக் கூலிப்படை ஏவி கொலை செய்துவிடலாம் என திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக தன்னுடைய கார் ஓட்டுனர் துரைராஜ் மூலமாக கனகராஜ் என்ற ரவுடியை அணுகி, அவருக்கு ரூ.20 லட்சம் கொடுத்து ஆராமுதனை கொலை செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஓட்டேரி போலீசார், வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ் செல்வி மற்றும் அவரது கார் ஓட்டுநர் துரைராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வெடிகுண்டு வீசி திமுக நிர்வாகி படுகொலை.. மர்மக் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!