சென்னை: 'ஊரும் உணவும்' என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், "நீட் தேர்வு வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தற்போது தான் மற்ற மாநிலங்களில் இருந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு குரல்கள் வரத் தொடங்கியுள்ளது. நீட் தேர்வு குறித்து மற்றவர்களும் உணர்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த வேளையில் தொடர்ந்து திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். நீட்டிலிருந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய கடமை அத்தனை பேருக்கும் உள்ளது” என தெரிவித்தார்.
ஒரு நாள்கூட அவர்களால் சபையை நீட்டித்து நடத்த முடியவில்லை. நிச்சயமாக அவர்களால் நடத்தி இருக்க முடியும். ஆனால் அரசாங்கம் முன்வரவில்லை. மணிப்பூர் குறித்தும் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை.
நாடாளுமன்ற மரபுகளின் படி பிரதமர் உரையின் மீது கட்சி தலைவர் குறுக்கிட எழுந்து நின்றால் நிச்சயம் அனுமதிக்கப்படுவார். ஆனால் தற்போது முதல் முறையாக அதற்கு அனுமதி இல்லை. எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் பொழுது யார் வேண்டுமானாலும் குறுக்கிடலாம், ஆனால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் பேசும் பொழுது யாருக்கும் குறுக்கிட உரிமை இல்லாத நிலைதான் இருக்கிறது" என்றார்.
தொடர்ந்து நடிகர் விஜய் நீட் தேர்வு ரத்து குறித்து தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கும் விதமாக பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, நீட் தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்கும் நடிகர் விஜயின் கருத்தை நானும் வரவேற்கிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வு வரக் காரணம் சங்கல்ப் இயக்கமும், பாஜகவும் தான்' - செல்வப்பெருந்தகை