சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில், அமலாக்கதுறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவுற்ற நிலையில், இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 471 நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வருகிறார். இன்று மாலை அல்லது நாளை அவர் சிறையிலிருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவினர் கொண்டாட்டம்: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் ஜாமீன் கிடைத்தது குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின்: இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்றுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.
கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையிலிருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது" என தெரிவித்துள்ளார்.
ஆருயிர் சகோதரர் @V_Senthilbalaji அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) September 26, 2024
அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட…
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்.. உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்ன?
சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி: இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது, "நண்பர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது. ஏனென்றால், கடந்த 15 மாதங்களாக செந்தில் பாலாஜி சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார்.
இவரைப் போன்று யாரும் சிறையிலிருந்தே சட்டப் போராட்டத்தை நடத்தி இருக்க முடியாது. மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு இன்று நிபந்தனை ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வெளியே வந்திருந்தாலும், நிரந்தரமாக இந்த வழக்கில் அவர் வெற்றி பெறுவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமலாக்கத்துறை போடுகின்ற வழக்கு அதிகம். ஆனால், அவர்கள் போட்ட வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளது மிகவும் குறைவு.
மிகக் குறைந்த அளவே குற்றப் பத்திரிகைகளும் தாக்கல் செய்துள்ளனர். வெறும் வழக்கை மட்டுமே அமலாக்கத்துறை போட்டு வருகின்றனர். இதன்பிறகு அமைச்சரவை மாற்றம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி ஏற்பு ஆகியவை எளிதாக நடக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், இது குறித்து தமிழக முதல்வர் தான் முடிவு எடுப்பார்" என தெரிவித்தார்.