திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.20-க்கு 200 கிராம் பஞ்சாமிர்தம் விற்பனையை நேற்று (பிப்.4) உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கிவைத்தார். மேலும் கோயிலின் படி பாதையில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதல் உதவி மையம், கோயில் சார்பில் துவங்கப்பட உள்ள மனநல காப்பகம் உள்ளிட்டவற்றையும் அவர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "பழனி கோயிலை மாஸ்டர் பிளானின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திருப்பதிக்கு நிகராக இக்கோயில் மேம்படுத்தப்படும். பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு மலிவு விலையில் அரிசி விநியோகத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில், ரேஷன் கடைகள் மூலம் ஒரு ரூபாய்க்கு அரிசி விநியோகம் செய்யப்பட்டது. தற்போது விலை இல்லாமல் ரேஷன் கடைகளில் அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பிறகு ஏன் மலிவு விலையில் அரிசி வழங்கவேண்டும்" எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 370 அரிசி ஆலைகள் இயங்கி வந்தது. தற்போது 700 அரிசி ஆலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு 6 லட்சம் மெட்ரிக் டன் அரிசி அரைக்கக்கூடிய வகையில் ஆலைகள் இருந்த நிலையில், தற்போது மாதத்திற்கு 12 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு அரிசி அரைக்கக்கூடிய வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு நெல்மணி கூட வீணடிக்கப்படாத நிலையை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதின் பேரில், 4 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு இருப்பு வைக்கக்கூடிய வகையில் ரூ.400 கோடி செலவில் சேமிப்பு குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலங்களில் மழைக்காலத்தில் நெல்மணிகள் மழைநீரில் மூழ்கி வீணானது. தற்போது ஒரு நெல்மணி கூட வீணடிக்கப்படாத நிலையை அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது" எனத் தெரிவித்தார்.
அப்போது நடிகர் விஜய் ஆரம்பித்த புதிய கட்சியால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படுமா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம் எனவும் அதனால், திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் பதிலளித்தார்.
இதையும் படிங்க: நிதிஷ் குமாருக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு - ஐதராபாத்தில் குவிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்! என்ன காரணம்?