சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது. அந்த வகையில், திமுக ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவும் அமைத்து, அதற்கான பணிகளை நடத்தி வருகிறது. அதேபோல, தொகுதிப் பங்கீடு குறித்தும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், நாளை முதல் இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வருகின்ற 23ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளது. மேலும், சமூக ஊடகங்களின் மூலமாகவும் பொதுமக்களுடைய கருத்துக்களை கேட்கவும் திமுக திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களுடைய பரிந்துரைகளை எவ்வாறு எல்லாம் பதிவு செய்யலாம் என்ற அறிவுறுத்தல்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கை குழு நாளை தூத்துக்குடி பயணம் செய்ய உள்ளது. எம்பி கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு, தூத்துக்குடியில் பொதுமக்களைச் சந்தித்து கருத்துக்களை கேட்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, 6ஆம் தேதி கன்னியாகுமரியிலும், 7ஆம் தேதி மதுரை, 8ஆம் தேதி தஞ்சாவூர், 9ஆம் தேதி சேலம், 10ஆம் தேதி கோவை, 11ஆம் தேதி திருப்பூர், 16ஆம் தேதி ஓசூர், 17ஆம் தேதி வேலூர், 18ஆம் தேதி ஆரணி, 20ஆம் தேதி விழுப்புரம், 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை இறுதியாக சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் சுற்றுப்பயணம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு இந்த இடங்களுக்கு வரும் பொழுது, முன்னதாகவே கோரிக்கை மனு பெறுவதற்காக இடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.