சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுக - சி.பி.எம் கட்சிகளுக்கு இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக பேச்சுவார்த்தை குழுவில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஆர்.எஸ்.பாரதி பொன்முடி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அதே போல் சி.பி.எம் பேச்சுவார்த்தை குழுவில் - மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், கனகராஜ், என்.குணசேகரன் ஆகியோர் இடம் பெற்றனர். முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்றது.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (பிப்.25) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மதுரை தொகுதியைக் கொடுக்க திமுக சம்மதம் எனவும், ஆனால் கோவை தொகுதியை மீண்டும் ஒதுக்குவதில் இழுபறி என தகவல் தெரிவிக்கின்றன.
தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, கோவை, நாகப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகளை விருப்பப்பட்டியலாக முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் கொடுக்கப்பட்டதாகவும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை, கோவை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் கூறும் போது, "பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது இணக்கமாக நடந்தது இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க வேண்டி உள்ளது விரைவில் நல்ல உடன்பாடு வரும் என தெரிவித்தார்.
டி.ஆர்.பாலு தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக பேச்சுவார்த்தை குழுவோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது, இணக்கமாக நடந்தது தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க வேண்டி உள்ளது. விரைவில், நல்ல உடன்பாடு வரும். அந்தச் செய்தியை விரைவில் உங்களிடம் தெரிவிப்போம். எந்த நெருடலும் இல்லாமல் இணக்கமாக மனம் திறந்து பேசினோம் கூடிய விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்துத் தெரிவிப்போம். மேலும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி விரைவில் தெரிவிப்போம்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கனமழையால் பாதித்த தென்மாவட்ட மக்களுக்கு ரூ.201.6 கோடி நிவாரணம் - அரசாணை வெளியீடு!