திருவண்ணாமலை: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஆளும் காட்சியான திமுக தீவிரமாக வேலை செய்து வருகிறது. குறிப்பாகத் தொகுதிப் பங்கீடு, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பது உள்ள்ளிடவைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே குழு அமைத்தது திமுக.
தற்போது தங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஏறத்தாழத் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்து விட்டது. இன்னும் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் சுமுக உடன்பாடு எட்டபடததாதல், அவர்களுடன் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாகிவருகிறது. அதேபோல் கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினர் உள்ளிட்ட பல தரப்பட்ட மக்களிடம் கருத்துகளைக் கேட்டு வருகிறது.
அனேகமாகத் தேர்தல் தேதி அறிவித்த சில நாள்களிலேயே கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் ஆளாகத் தேர்தல் அறிக்கை வெளியிட்டது போல், இந்த முறையும் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா, தமிழக அரசின் 3 ஆண்டு சாதனை மற்றும் 2024 பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தைத் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது திமுக.
அதன் ஒரு பகுதியாகத் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன், அண்ணாசிலை சிலை அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏவும், திமுக தலைமை கழக பேச்சாளருமான வி.பி.கலைராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
முன்னதாக பொதுக்கூட்டத்திற்கு வந்த பெண்களுக்கு, கடந்த 10ஆண்டுகளாகப் பிரதமர் மோடி, வாயால் வடை சுட்டு வருவதாகக் கூறி திமுக தொகுதி பொறுப்பாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் பெண்களுக்கு வடை மற்றும் திமுக துண்டுப் பிரசுரத்தை வழங்கினார்கள். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்ப்பட்டது.
இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் வி.பி.கலைராஜன் பேசுகையில்,"பாஜக சார்பாக பல்லடம், திருநெல்வேலி மற்றும் சென்னையில் நடந்த மூன்று கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர். சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வரவில்லை.
9 கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என அண்ணாமலை கூறுகிறார். 9 இல்லை 9ஆயிரம் கூட்டங்களில் பங்கேற்றாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியிலும் கூட பாஜக டெபாசிட் வாங்காது. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என கூறிவரும் அண்ணாமலை, கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவரகுறிச்சியில் தொகுதியில் போட்டியிட்டு 20ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
அண்ணாமலைக்கு நேரடி சவால் விடுகிறோன், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் பெற்றால், நான் அரசியலில் இருந்தே விலகிக் கொள்கின்றேன்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: "லஞ்சம் உரிமை அல்ல" - எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி!