சென்னை: நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் மக்கள் அனைவரும் இன்று காலையிலேயே புத்தாடை அணிந்து, இல்லங்களில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் தித்திக்கும் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி இந்து பண்டிகையாக அறியப்பட்டாலும், அனைத்து தரப்பு மக்களாலும் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் பணியாற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அதுபோல, சென்னை வாசிகளும் குடும்பத்தோடு தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அதிலும், சென்னையில், பல தரப்பு மக்கள் ஒரே இடத்தில் வசிக்கும் பகுதிகளில் தீபாவளி போன்ற பண்டிகைகள் பாரபட்சம் இன்றி அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து இனிப்பு, பலகாரங்களை பகிர்ந்து கொண்டாடப்படுவதும் உண்டு.
இதையும் படிங்க: "தவெக மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார்" - விஜய்க்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினி!
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று சரவெடி, கம்பி மத்தாப்பூ, மிளகாய் பட்டாசு, லட்சுமி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த மாணவி ஜனனி கூறுகையில், காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து, குளித்து, புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து வருகிறோம். பட்டாசு வெடித்து போவது போல், நம்முடைய துன்பமும் வெடித்து போக வேண்டும். வீட்டில் இனிப்பு தயாரித்து மகிழ்ச்சியாக உண்டு, பட்டாசு வெடித்து அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள்'' என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்