தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இயங்கும் திகோ சில்க்ஸ் (எ) திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், அகில இந்திய அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாகவும் தொடர்ந்து லாபகரமாகவும் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டை விட சுமார் ரூ.6 கோடி அளவிற்கு விற்பனை குறைவு என்பதனை காரணம் காட்டி, கடந்த ஆண்டு வழங்கி வந்த 38 சதவீத போனஸை 28 சதவீதம் குறைத்து 10 சதவீதம் போனஸ் வழங்குவதாகவும், அதுபோல பங்கு ஈவுத்தொகையை 14 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் குறைத்து 8 சதவீதம் மட்டும் இவ்வாண்டு வழங்கப்படும் என என நிர்வாகம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து 1,800க்கும் மேற்பட்ட பட்டு கைத்தறி நெசவாளர்கள், கடந்த ஆண்டே போலவே போனஸ் மற்றும் பங்கு ஈவுத்தொகை வழங்க வேண்டும் என, நேற்று காலை திகோ சில்க்ஸ் அலுவலகத்திற்குள் அமர்ந்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏவுமான கோவி.செழியன் துரிதமாக செயல்பட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க : அக்னி தீர்த்தம் அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவுகள் எங்கே கலக்கிறது? - நீதிபதி கேள்வி!
பின்னர் அவரது அனுமதியுடன், கூட்டுறவுத்துறை ஆணையர் உத்தரவின் பேரில், கடந்த ஆண்டை விட 2 சதவீத போனஸ் அதிகரித்து 40 சதவீதம் போனஸ் வழங்கிடவும், கடந்த ஆண்டை போலவே பங்கு ஈவுத்தொகை 14 சதவீதம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சங்கத்தின் 69வது ஆண்டு பொதுப் பேரவை கூட்டம் இன்று காலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நெசவாளர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத்தொகையாக மொத்தம் ரூ. 4 கோடியே 96 லட்சம் வழங்கினார். இந்நிகழ்வில் சங்கத்தின் மேலாண் இயக்குனர், மேனாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், கும்பகோணம் துணை மேயர் சு.ப.தமிழழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்