சென்னை: நடிகர் சத்யராஜின் மகளும், பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், மகிழ்மதி இயக்கத்தின் நிறுவனருமான திவ்யா சத்யராஜ், தனது மகிழ்மதி இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட, பாஜக தரப்பில் இருந்து திவ்யா சத்யராஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், குறிப்பிட்ட மதத்தைப் போற்றும் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இணைந்து செயல்பட மாட்டேன் என திவ்யா சத்யராஜ் பாஜகவில் இணைய மறுத்துள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து அவரிடம் ஈடிவி பாரத் ஊடகம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என்று பத்திரிகை நண்பர்களிடம் சொல்லி இருந்தேன்.
அதற்குப் பிறகு நான்கு கேள்விகள் என்னை அடிக்கடி கேட்கிறார்கள். அதாவது நீங்கள் எம்.பி ஆக வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வருகிறீர்களா, ராஜ்யசபா எம்.பி ஆக ஆசையா, அமைச்சர் பதவி மீது ஆர்வமா, சத்யராஜ் சார் உங்களுக்கு பிரச்சாரம் செய்வாரா போன்ற கேள்விகள் அடிக்கடி கேட்கிறார்கள்.
அதற்கு எனது பதில், பதவிக்காகவோ, தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காகவோ அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கவில்லை. மக்களுக்கு வேலை செய்ய அரசியலுக்கு வர நினைக்கிறேன். நான் களப்பணிகள் செய்ய ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிறது.
மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்தேன். அந்த அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கி வருகிறேன். நான் தனிக்கட்சி தொடங்கப் போவது இல்லை.
மேலும், எனக்கு வரும் தேர்தலில் போட்டியிட பாஜகவிடம் இருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், எந்த ஒரு மதத்தைப் போற்றும் கட்சியுடன் இணைவதில் விருப்பம் இல்லை. ஏனென்றால் எனக்கு சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை. எந்த கட்சியில் இணையப் போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன்.
புரட்சித் தமிழன் தோழர் சத்யராஜின் மகளாகவும், ஒரு தமிழ் மகளாகவும் தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன். அப்பா எந்த கட்சியிலும் இருந்ததில்லை. எனக்கு அரசியல் ஆசை இருப்பது அப்பாவுக்குத் தெரியும். அவருக்கு அதில் சந்தோஷம். நான் அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும், என் உயிர் தோழனாகவும், ஒரு தகப்பனாகவும் எனக்கு பக்கபலமாக இருப்பார்” என்று நம்மிடம் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.