இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பில் 'தொல்லியல் மற்றும் கல்வெட்டு பயிற்சி' நேற்று (டிச.18) மற்றும் நேற்று முன்தினம் (டிச.19) என இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. இந்த பயிற்சியை அக்கல்லூரி பொறுப்பு முதல்வர் ச.சிவகுமார் தொடங்கி வைத்தார். வரலாற்றுத்துறைத் தலைவர் வீ.கோவிந்தன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து, இணைப் பேராசிரியர் ரா.வேலாயுதம் நன்றி உரை கூறினார்.
முதல் நாள்: இப்பயிலரங்கின் முதல் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்து படங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. பிறகு, தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பின் அந்த பழந்தமிழ் எழுத்துகளை எழுதவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த இப்பயிலரங்கின் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: "எங்க மண்ணுதான், எங்க மானம்" டங்ஸ்டன் திட்டம் வேண்டாம்; மலை மீதேறி மக்கள் போரட்டம்!
இரண்டாம் நாள்: இரண்டாம் நாள் களப்பயணமாக ராமநாதபுரம், ராமலிங்கவிலாசம் அரண்மனை ஓவியங்களை மாணவர்கள் பார்வையிட்டனர். அதன் தொடர்ச்சியாக, கள்ளிக்கோட்டை கோயிலில் நடந்த பயிற்சியில், கல்வெட்டுகளை படியெடுக்கும் முறைகளை மாணவர்களுக்கு வே.ராஜகுரு செய்து காட்டினார்.
கல்வெட்டுகளை படியெடுக்கும் முறை: கல்வெட்டை சுத்தம் செய்து மேப்லித்தோ பேப்பரை தண்ணீரில் நனைத்து அதன்மீது ஒட்டி, பள்ளமான எழுத்துகளில் பேப்பர் பதியுமாறு, பன்றி முடி பிரஸால் அடித்து, விலங்கு தோலில் செய்த திண்டில் கருப்பு மை தடவி, பேப்பர் மேல் ஒத்தி எடுத்தனர். இதையடுத்து கல்வெட்டை எளிதாக படிக்க முடிந்ததை பார்த்து மாணவ, மாணவியர் வியந்தனர்.
அதேபோல், பள்ளமான கல்வெட்டு எழுத்துகளில் அரிசி மாவு தடவி படிக்கும் முறையையும் மாணவர்கள் ஆர்வமுடன் கற்றுக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அறிவழகன், விஜயகுமார், பாரதி, மோகன கிருஷ்ணவேணி, மும்தாஜ் பேகம், ராமமூர்த்தி, உடற்கல்வி இயக்குநர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.