சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாயும், திருநெல்வேலி மாவட்ட திமுக செயலாளரின் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பணப் பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, திருநெல்வேலி தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது என அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்வதாகவும், விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு! - Install Automatic Doors In Buses