தஞ்சாவூர்: ஆண்டுதோறும் மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழா ஐப்பசி திங்கள் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இவ்வாண்டும் 1039வது சதயவிழா வழக்கம் போல் அரசு சார்பில் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டு தஞ்சையில் சிறப்பாக இன்று நடைபெற்று வருகிறது.
அதே வேளையில் ராஜராஜசோழனின் சமாதி என் நம்பப்படும், கும்பகோணம் அருகேயுள்ள உடையாளுரில் அவரது மகன் ராஜேந்திர சோழனால் மிகப்பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து நினைவுக்கோயில் அமைக்கப்பட்டது. இது குறித்த கல்வெட்டுகள் அங்குள்ள பால்குளத்தி அம்மன் கோயிலிலும், கைலாசநாதர் கோயில்களிலும் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கட்டிடக்கலைக்கு மிகப்பெரிய சான்றாக இன்றளவும் திகழும், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவர் ராஜராஜசோழர். ஆனால் அவரது சமாதி இன்று ஓர் சிறு கொட்டகையின் கீழ் அமைந்துள்ளது. இச்சமாதி மீது அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு பல ஆண்டுகளாக நாள்தோறும் பூஜைகள் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: "தமிழக அரசு ஆன்மீக அரசு என நிரூபிக்கிறது"- தஞ்சை சதய விழாவில் ஆதீனம் நெகிழ்ச்சி!
இது மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதி தான் என ஒரு சில வரலாற்று ஆராய்ச்சியாளர்களால், கல்வெட்டு சான்றுகள் மூலமும் நம்பப்படுகிறது. இந்நிலையில், ராஜ ராஜ சோழனின் 1039வது ஆண்டு சதய விழாவினை முன்னிட்டு, கும்பகோணம் அருகேயுள்ள உடையாளுரில், எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன், திரௌபதி திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, மாமன்னர் ராஜராஜன் கல்வி பண்பாட்டுக் கழகத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் உடையாளூரில் அவரது சமாதி என கருதப்படும் இடத்தில் உள்ள லிங்கத் திருமேனிக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது,"மாமன்னன் ராஜராஜசோழகன் சமாதி குறித்து நிலையான முடிவு எடுக்க, மத்திய மாநில அரசுகள் இங்குள்ள கல்வெட்டுகள் வாயிலாக அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளா வேண்டும். இதன் மூலம் உண்மை நிலையை உலகிற்கு உணர்த்திட வேண்டும். இங்கு தான் அவரது பள்ளிப்படை கோயில் (சமாதி) அமைந்துள்ளது என்பது அகழ்வாராய்ச்சி மூலம் நிரூபிக்கப்படல் உடனடியாக ராஜராஜசோழனுக்காக மணி மண்டபம் எழுப்பிட வேண்டும். மேலும் ஆண்டு தோறும் தஞ்சையை போலவே இங்கும் அரசு விழா நடத்த வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.