சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட, அதனை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னதாக, சென்னையில் கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டடத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவிற்காக இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் ராகேஷ் பால் சென்னை வந்திருந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் ராகேஷ் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாலை உயிரிழந்தார்.
இந்த செய்தியையடுத்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக்கு நேரில் சென்று ராகேஷ் பால் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
யார் இந்த ராகேஷ் பால்? ராகேஷ் பால், இந்தியக் கடலோர காவல் படையில் தலைவராக சிறப்பாக செயல்பட்டதற்கு Ati Vishisht Seva Medal, President's Tatrakshak Medal மற்றும் Tatrakshak Medal ஆகிய மூன்று பதக்கங்களைப் பெற்றுள்ளார். இந்திய கடலோரக் காவல்படையின் 25வது தலைமை இயக்குநராக ராகேஷ் பால் நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.
இந்திய கடற்படை அகாடமியின் முன்னாள் மாணவரான அவர், ஜனவரி 1989ல் இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்தார். 34 ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள இவர், காந்திநகரின் கமாண்டர் கடலோர காவல்படை மண்டலம் (வடமேற்கு), துணை தலைமை இயக்குனர் (கொள்கை மற்றும் திட்டங்கள்) மற்றும் புதுடெல்லி கடலோர காவல்படை தலைமையகத்தில் கடலோர காவல்படை கூடுதல் தலைமை இயக்குனர் ஆகிய பதவிகளை வகித்தவர்.
இது தவிர, டெல்லியில் உள்ள கடலோரக் காவல்படை தலைமையகத்தில் இயக்குனர் (உள்கட்டமைப்பு மற்றும் பணிகள்) மற்றும் முதன்மை இயக்குனர் (நிர்வாகம்) போன்ற பல்வேறு மதிப்புமிக்க பணியாளர் பொறுப்புகளை வகித்துள்ளார். ஐ.சி.ஜி.எஸ் சமர்த், ஐ.சி.ஜி.எஸ் விஜித், ஐ.சி.ஜி.எஸ் சுசேதா கிருபளானி, ஐ.சி.ஜி.எஸ் அகல்யாபாய் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் சி-03 ஆகிய கப்பல்களில் தலைமை பொறுப்பு வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘தமிழ் வெல்லும்’.. “இதுவும் கலைஞரின் சாதனை தான்" - நாணய வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!