கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் நகைகள் அதிக அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று கோவையில் தயாராகும் தங்க நகைகளை விமானம் மூலம் வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணியினை செய்து வருகிறது.
அந்த வகையில், இன்று (ஏப்.06) கோவை ராமநாதபுரம் பெர்க்ஸ் பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது, அந்த வழியாக வந்த தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் வாகனத்தினை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி தங்கக் கட்டிகள், தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருப்பது தெரிய வந்தது. அதனை அடுத்து ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் அந்த வாகனத்தையும் அதிலிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாகத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அவற்றை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு வந்து அவற்றை அளவிட்டு பெட்டிக்குள் வைத்து சீல் செய்தனர். மேலும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த நகைகள் கோவை மாவட்ட ஆட்சியர் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்து சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமேகலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "பறக்கும் படை அதிகாரிகள் பெர்க்ஸ் பள்ளி சந்திப்பு பகுதியில் சோதனை நடத்தியபோது தங்கம் மற்றும் வைர நகைகள் ஒரு வாகனத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டது.
இதன் மதிப்பு சுமார் 3 கோடியே 54 லட்சம் ரூபாய் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட தங்க மற்றும் வைர நகைகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். தங்கம் மற்றும் வைர நகைகளின் சுமாரான மதிப்பு மட்டுமே தற்போது சொல்லப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்தின் வாகனத்தில் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தனியார் நிறுவனத்தினர் உரிய ஆவணங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். உரிய ஆவணங்களைச் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினர் சமர்ப்பித்த பிறகு பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் வாகனம் திருப்பி கொடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விமானியிடம் ரூ.2.11 லட்சம் மோசடி முதல் பர்த்டே பார்ட்டியின் போது நேர்ந்த விபத்து வரை சென்னை க்ரைம் நியூஸ்!