தருமபுரி: தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும், கிராம சாலைகள் மற்றும் மலைச்சாலைகள் உள்ளிட்ட சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, பாமகவைச் சார்ந்த தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
உண்ணாவிரதம் இருக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததை அடுத்து, தரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து, தருமபுரி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் மற்றும் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
மேலும், துறை சார்ந்த பொறியாளர்கள் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ வெங்கடேஸ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சட்டமன்ற உறுப்பினர், குறிப்பிட்ட தம்மம்பட்டி ஊராட்சி சோளிங்கர் முதல் மலைக்காடு வரையிலான ஆறு கிலோமீட்டர் சாலையை நாளை தற்காலிக சீரமைப்பு செய்யவும், மற்ற கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, இரண்டு மணி நேரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
இது குறித்து பேசிய தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன், “பொதுமக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்து, ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். பொதுமக்களுக்காகத்தான் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். அவர்களுக்குப் பதிலாக நானே போராடுகிறேன்.
பொதுமக்களின் கோரிக்கை குறித்து சட்டமன்றத்திலும், தொடர்புடைய துறை சார்ந்த செயலாளர்களிடம் நேரில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டேன். அதிகாரிகள் சாலை பணிகளை முடித்து தருவதாக உறுதியளித்ததை அடுத்து, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் விசிக-2, மதிமுக-1 முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு!