தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் மத்திய அரசின் அகில இந்திய வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது. 2007 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு படிப்படியாக தற்போது காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒலிபரப்பாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வானொலி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தருமபுரி அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் கிடைத்து வந்தது. வெளி மாவட்டங்களில் ஒலிபரப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இது குறித்து வானொலி நேயர்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி செந்தில்குமார் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
அவர் அகில இந்திய வானொலி நிலைய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு தொழில்நுட்ப பிரச்சனையைச் சீர் செய்து முழுமையான ஒலிபரப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த சில தினங்களாக நடைபெற்ற சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து இன்று தமிழ்ப் புத்தாண்டு முதல் தருமபுரி அகில இந்திய வானொலி நிலையம் வழக்கம் போல் தனது ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது.
இந்த ஒலிபரப்பு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒலிபரப்பு கிடைத்து வருகிறது. தொழில்நுட்ப குறைபாடு சீர் செய்யப்பட்டு வானொலி ஒளிபரப்பைத் தொடங்கிய நிலைத்தாருக்குத் தொடர்ந்து நேயர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தனது எக்ஸ் தளத்தில், “அகில இந்திய வானொலி நிலையத்தின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு சேவை முழுமையாக ஏழு மாவட்ட மக்களுக்குச் சென்றடைய முயற்சி எடுத்த தருமபுரி வானொலியில் பணிபுரியும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என பதிவு செய்துள்ளார்.