நீலகிரி: தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் ஒன்றான நீலகிரி தொகுதி 'ஸ்டார் தொகுதிகளின்' பட்டியலில் உள்ளது காரணம் இங்கு முன்னால் மத்திய அமைச்சரும், தற்போதைய சிட்டிங் எம்பியுமான ஆ.ராசா போட்டியிடுகிறார்.
அதே போல் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகரும் அவினாசி சட்டமன்ற உறுப்பினருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். கடந்த முறை திமுக - அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில் இந்தமுறை மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் பா.ஜ.க. வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகக் கடந்த 25ம் தேதி நீலகிரிக்கு வருகை புரிந்தார். முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்த எல்.முருகன் மாலை 5 மணியளவில் உதகையை அடுத்த கடநாடு கிரியுடையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்குள்ள கடநாடு சமுதாயக்கூடம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் கூட்டம் நடத்தியுள்ளார்.
இந்த கூட்டம் நடத்துவதற்கு குறித்து எந்தவித அனுமதியும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை துணை தாசில்தார் தனலட்சுமி தேனாடுகம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அவருடன் இருந்த நீலகிரி பா.ஜ.க. மாவட்ட தலைவர் மோகன்ராஜ், நிர்வாகிகள் ஜெகதீஸ், ராஜேஷ் மற்றும் யுவராஜ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் கூட்டம் நடத்துவதாக இருந்தால் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெறவேண்டும். அனுமதி வாங்காததால் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் வாரிசுகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும், மற்ற கட்சிகளில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும் - நீலகிரி அதிமுக வேட்பாளர் பேச்சு!