கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மைய பகுதியில் அமைந்துள்ள கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்து நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைகளில் 229 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதில் அடுத்தடுத்து 66 பேர் உயிரிழந்த நிலையில், ஜூலை மாதம் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையிலிருந்த 72 வயதான கண்ணன் என்பவரும் உயிரிழந்தார். அதன் மூலம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 67-ஆக அதிகரித்தது.
அதையடுத்து கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம் மற்றும் மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 229 பேரில் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் எனவும், 67 பேர் இறந்ததாகவும் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதான மோகன் என்பவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கள்ளச்சிகுறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் பலி எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, இவ்வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசார், கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் சப்ளை செய்தது தொடர்பாக இதுவரை 24 பேரை கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 24 பேரில் கவுதம்சந்த், பன்ஷிலால், கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், விஜயா, சின்னதுரை, ஜோசப், கதிரவன் உட்பட 15 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது.
இதனையடுத்து கடலுார் மத்திய சிறையில் உள்ள 15 பேரையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, 15 பேரின் நீதிமன்ற காவலை வரும் 19ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்