புதுக்கோட்டை: புது அரண்மனை வீதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாகன விற்பனை மையம் திறப்பதற்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ரெனிஸ் (22), சண்முகேஸ்வரர் (27), கவின் (22), பிரவீன் (20), ஹரி (17), ஜெயம் ராஜ் (19), குணசீலன் (20) ஆகிய 7 இளைஞர்கள் பார்த்து வந்துள்ளனர்.
அப்போது, இந்த இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் செயல்பட்டு வரும் டீக்கடையில் டீ பார்சல் வாங்கி வந்து அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது டீ சுவையில் வித்தியாசம் இருந்ததை அறிந்த இளைஞர்கள், டீ கடைக்காரரிடம் சென்று விசாரித்துள்ளனர். அப்போது டீ தயாரிக்க பயன்படுத்திய தண்ணீர் பேரலில் பார்க்கையில், தண்ணீரில் அழுகிய நிலையில், எலி ஒன்று இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, டீ அருந்திய 7 இளைஞருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக 7 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர்கள் அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட டீக்கடையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் பிரவீன் குமார் உடனடியாக ஆய்வு செய்து, கடைக்கு சீல் வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.