சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்க பாண்டியன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் இணைந்து கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தயாநிதி மாறன், கரோனா காலத்தில் மனு அளிக்கச் சென்ற தங்களை, முதன்மைச் செயலாளர் சண்முகம், தங்களை உரிய மரியாதை இல்லாமல் மூன்றாம் தர மக்களாக அதாவது தாழ்த்தப்பட்ட மக்களை (Schedule Caste) போன்று நடத்தியதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து, கோயம்புத்தூர் சி.எம்.சி காலனி வெரைட்டி ஹால் சாலைப் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் பிஎச் சாலையில் உள்ள பி3 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில்,"தாழ்த்தப்பட்ட மக்களை எம்பி தயாநிதி மாறன் இழிவுபடுத்தியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தயாநிதி எம்பி மீது, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையானது கோவையில் நடைபெற்று வந்தநிலையில், தற்போது அது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
சம்பவ நடைபெற்ற இடம் சென்னை என்பதால் இவ்வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் இவ்வழக்கு தொடர்பாகத் தயாநிதி மாறன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "மற்ற மாநில மாணவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு தமிழக அரசு உதவி"- வங்கதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள்!