தூத்துக்குடி: மதம் மாறினால் 10 கோடி ரூபாய் பணம் தருவதாக கூறி, சுமார் 5 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில், ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பெங்களுர் சிங்க சந்தரா பகுதியைச் சேர்ந்த ஒருவரை சைபர் குற்ற பிரிவு போலீசார் கைது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐஎம்ஒ (IMO) என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற ஐடியிலிருந்து (ID) தொடர்பு கொண்ட மர்ம நபர், இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் 10 கோடி ரூபாய் தருவதாகக் கூறியுள்ளார். மேலும் அதற்காக, அமெரிக்காவில் வங்கிக் கணக்கு தொடங்கவும், வருமானவரி செலுத்துவது என்பன உள்ளிட்ட காரணங்களுக்காக இளைஞரிடம் பணம் கேட்டுள்ளார்.
அதனை நம்பிய கோவில்பட்டி இளைஞர் 4 லட்சத்து 88 ஆயிரத்து 159 ரூபாயை ஜிபே(Gpay) மூலமாக பணம் அனுப்பியுள்ளார். பின்னர், தான் மோசடி செய்யப்பட்டதை தெரிந்துகொண்ட இளைஞர், இது குறித்து என்சிஆர்எப் (NCRP - National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணனின் உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார், மோசடி செய்தவர்களை கண்டுபிடிக்கத் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு, ஆனந்தம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (வயது 31) என்பவர், பாதிக்கப்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, கடந்த (26.04.2024) அன்று ராஜவேலை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேலும், இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் வழக்கில் பண மோசடியில் ஈடுபட்ட மற்றொரு நபர் கர்நாடகா மாநிலம், பெங்களுர் சிங்க சந்தரா பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கணேசன் (31) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி சிங்க சந்தரா பகுதியில் கணேசனை போலீசார் கைது செய்தனர்.
அதன் பின்னர் அவர், தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு நேற்று தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி, தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இது குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: MyV3Ads நிறுவனர் சக்தி ஆனந்த் உட்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு! - ஆடியோ வைரல் - MyV3Ads Scam Issue