சென்னை: சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் வழக்கம்போல் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர், சுற்றுலாப் பயணியாக சார்ஜா போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் மீது சுங்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதை அடுத்து அந்தப் பெண் பயணியை சுங்க அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அதோடு மிகுந்த பதற்றத்துடனும் காணப்பட்டார். இதையடுத்து அவருடைய உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர். உடைமைகளில் எதுவும் இல்லை.
இதனால் பெண் சுங்க அதிகாரிகள், அந்தப் பெண் பயணியை, தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அந்தப் பெண் பயணியின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலை வெளியில் எடுத்து திறந்து பார்த்தனர். அதில் இருந்த நான்கு பிளாஸ்டிக் டப்பாக்குள், தங்கப்பசை இருந்தது தெரியவந்தது. அந்த 4 டப்பாக்களிலும் என மொத்தம், ஒரு கோடி 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.7 கிலோ தங்கப்பசை இருந்தது.
இதைத்தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் அந்த தங்க பசையை பறிமுதல் செய்தனர். அதோடு அந்தப் பெண் பயணியை கைது செய்து மேலும் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண் பயணி கடத்தல் கோஷ்டிக்கு, கடத்தல் குருவியாக செயல்பட்டு, இதை போல் சார்ஜாவுக்கு சென்று விட்டு, கடத்தல் தங்கத்துடன் திரும்பி வந்தது தெரியவந்தது. அதோடு இவரை இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய ஆசாமி யார்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊட்டி மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 வயது சிறுவன் உயிரிழப்பு! - Tourist Bus Accident In Ooty