சென்னை: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் (Indian Premier League 2024) வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. இந்த ஆண்டிற்கான முதல் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதும் போட்டி வரும் மார்ச் 22ஆம் தேதி இரவு 8 மணிக்கு சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. போட்டிக்கான டிக்கெட்டுகளை பேடிஎம் மற்றும் இன்சைடர் இணைய தளத்தில் ரசிகர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியிடபட்டிருந்தது. அந்த வகையில் தற்போது ஒரு டிக்கெட் விலை 1,700 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சேப்பாக்கம் மைதானம் 40 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது என்பதால் ஆன்லைனில் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த முறை நேரடியாக கவுண்டரில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்ட நிலையில், கூட்ட நெரிசல், கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இம்முறை டிக்கெட் முழுமையாக ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்று கொள்ள பேடிஎம் (paytm) அல்லது www.insider.com என்கிற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் சத்தமே இல்லாமல் டிக்கெட் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த முறை I, J, K ஸ்டாண்ட்களில் உள்ள இருக்கைகளுக்கு ஒரு டிக்கெட் விலை 2 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், 22ஆம் தேதி நடைபெற உள்ள போட்டிக்கு 4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், C, D, E லோயர் இருக்கைகளுக்கான டிக்கெட் விலை ரூ.200 உயர்த்தப்பட்டு, ரூ.1700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை 3 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த CDE upper ஸ்டாண்ட் டிக்கெட்டுகள் இம்முறை ரூ.4 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
அதே போன்று, மேல் தள டிக்கெட்டுகள் கடந்த தொடரில் ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.7 ஆயிரத்து 500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற திடிர் டிக்கெட் விலை ஏற்றத்தால் ஒரு பக்கம் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருந்தாலும், மறுபக்கம் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய உடனே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவையில் உரிய ஆவணமின்றி ரூ.42.26 லட்சம் ஒரே நாளில் சிக்கியது!