சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) சந்தித்தனர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கடந்த 19ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விழுப்புரம் தொகுதி வேட்பாளர் ரவிகுமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், நாகப்பட்டினம் தொகுதியின் வேட்பாளர் செல்வராஜ் ஆகியோர் தங்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலினை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "நாடாளுமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி ஆகும். இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தோம் என தெரிவித்தார்.
மேலும், இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரும் நல்ல வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெறுவார்கள்.தமிழகத்தில் கூட்டணியை ஒருங்கிணைத்து தலைமையேற்ற முதலமைச்சருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தோம். தமிழ்நாடு புதுச்சேரியில் இந்தியா கூட்டணி 40 தொகுதியிலும் பெறும் வெற்றி என்பது மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கும்.
பாஜக மூன்றாம் முறை ஆட்சி அமைக்கும் என்பது சாத்தியமில்லை. பிரதமரும், பாஜகவும் பத்தாண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளை கூற எதுவும் இல்லாத நிலையில் மக்களை பிளவுபடுத்த மதவாத பிரச்சனைகளை தூண்டும் வகையில் வாக்கு சேகரிக்கிறார்கள். பாஜக பத்தாண்டு சாதனைகளை கூறி பிரச்சாரம் செய்யாமல் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த மதவாத பிரச்சனைகளை தூண்டும் வகையில் வாக்கு சேகரிக்கிறார்கள்.
நாடு மற்றும் நாட்டின் நலன் அவர்களுக்கு முக்கியம் இல்லை. எதாவது ஒரு வகையில், மத ரீதியான வன்முறையை ஏற்படுத்துகிறார்கள். வாக்குகளை பெற்று விடவேண்டும் என்ற குறுகிய சிந்தனையோடு பிரதமர் மற்றும் பாஜக செயல்படுகிறது. நாட்டு மக்கள் நிச்சயமாக இந்த குறுகிய நோக்கத்தை நிராகரிப்பார்கள். பூணை உறியை சுற்றி வருவது போல மோடி தமிழகத்தை 9 முறை சுற்றி வந்தார் ஆனால் எதுவும் நடக்கவில்லை" என கடுமையாக விமர்சனம் செய்தார்.