சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை திமுக, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை, தொகுதிப் பங்கீடு என மிக வேகமாகச் செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்ட நகர்வாக, எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு என்ற பேச்சுவார்த்தையும் இன்று (மார்ச் 12) நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் திருப்பூர் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கீட்டுக்கான ஒப்பந்தம் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் முன்னிலையில் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், "நாடாளுமன்றத் தேர்தல் தேதி சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாஜக நாட்டு மக்களைத் திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளது. பாஜக ஆட்சியில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. கருப்புப் பணம் மீட்கவில்லை, எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்றார்.
தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து எஸ்பிஐ வங்கி அதன் விவரங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. ஆனால் எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்டதை நீதிமன்ற நிராகரித்து இன்றைக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் கவனத்தைத் திசை திருப்பக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக அமல்படுத்தும் செயல் மக்களைப் பிளவுபடுத்தும் செயல். மத ரீதியாகப் பிளவுபடுத்தும் அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக செயல்படுகிறது.
திமுக தமிழகத்தில் அதன் தோழமை கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து நல்ல உடன்பாடுகள் எட்டப்பட்டு விட்டது. எந்த சின்ன பிரச்சனையும் இல்லை. எல்லோரும் திமுக கூட்டணியில் பிரச்சனைகள் வரும் என எதிர்பார்த்தார்கள். அரசியல் ஆதாயம் பெறலாம் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அவர்களுக்குப் பதில் அளிக்கும் வரையில், இந்த அணி நல்ல முறையில் உருவாகி இருக்கிறது. கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற திருப்பூர், நாகப்பட்டினம் ஒதுக்கப்பட்டுள்ளது. 40 தொகுதியிலும் நாங்கள் போட்டியிடுவது போல நினைத்து வெற்றி பெறப் பணியாற்றுவோம். 40க்கு 40, நாடும் நமதே என வெற்றி பெறுவோம்.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது வேட்பாளர்கள் யார் என்பதைக் கட்சி முடிவு செய்து ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகையை பிச்சை என்று கூறிய விவகாரம்.. விமர்சனங்களுக்கு குஷ்பு எழுப்பும் கேள்வி!