திருநெல்வேலி: நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சார்ந்தவர் உதய தட்சாயினி (வயது 23) மற்றும் பாளையங்கோட்டை நம்பிக்கை நகர் பகுதியைச் சார்ந்த மதன்குமார் (வயது 28) ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன்.14) வீட்டை விட்டு வெளியேறிய உதய தாட்சாயினி, காதலன் மதன்குமார் உடன் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
நேற்று மாலை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள லெனின் சிலை முன்பு உதய தாட்சாயினியும், மதன்குமாரும் கட்சியினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, தகவலறிந்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்ற பெண் வீட்டார், அங்கு கலவரம் செய்து, அலுவலகத்தையே சூறையாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பெண்ணின் குடும்பத்தார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகையால் கொலை செய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் புதுமண தம்பதியினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
ஆனால், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த பந்தல் ராஜா உள்ளிட்டோர் அலுவலகத்தில் நுழைந்து உள்ளே எங்கள் நிர்வாகி பழனியை பெண் என்றும் பார்க்காமல் தாக்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஆணவக்கொலை உள்ளிட்ட கொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கும் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, பிபின் என்ற காவல் துறையைச் சேர்ந்தவர் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞரிடம் பேசி இருவரையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் ஒப்படைக்க சொல்லாமல், என்னிடம் ஒப்படையுங்கள் என சொன்னதற்கான காரணம் என்ன என்பது புரியவில்லை.
பெண் வீட்டாருடன் இணைந்து சமூக விரோத கும்பல் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை கொலை செய்யும் நோக்கில் உள்ளனர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபரை தாக்கியும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. காவல் துறையினரில் உள்ள சிலர் பெண் குடும்பத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர். கூலிப்படையை ஏவும் முயற்சியில் பெண் வீட்டார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு காவல்துறை மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் சமூக சாதிய வன்கொடுமைக்கு எதிரான பிரச்சாரத்தை அரசு மேற்கொள்ள வேண்டும். சமூக ஒடுக்குமுறைக்கு பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சி.பி.எம் அலுவலகத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது.
சாதி மறுப்பு திருமண விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கூலிப்படையினருடனான தொடர்பு குறித்து ஆய்வு செய்ய பெண்ணின் தாய் உள்ளிட்டோரின் தொலைப்பேசி உரையாடலை ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும். காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை கலைய வேண்டும்" எனத் தெரிவித்தார்.