சென்னை: சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (செவ்வாய்கிழமை) சிறுவன் வேலை நிமித்தமாக தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் திருவல்லிக்கேணிக்கு வந்துள்ளார்.
திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது செல்போனில் அழைப்பு வந்ததால் சிறுவன் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கேயே நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த மாடு ஒன்று எதிர்பாராத விதமாக ஓடிவந்து சிறுவனை முட்டி கீழே தள்ளியது.
இதில் கீழே விழுந்த சிறுவனுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக சிறுவன் தந்தைக்கு தகவல் தெரித்ததன் பேரில் அங்கு வந்த தந்தை, சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களிடம் மாடுகளைக் கட்டி வைக்குமாறு கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.