சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கல்வி பயில லண்டன் சென்றுள்ளதால் அடுத்த மூன்று மாதங்களுக்கு (செப்டம்பர் - நவம்பர்) கட்சியின் அன்றாட பணிகளை கவனிக்க, ஹெச்.ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் இன்று தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான கல்வி பயில்வதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்து சென்றுள்ளார். செப்டம்பர் முதல் நவம்பர் வரை மூன்று மாதங்கள் அவர் அங்கு தங்கி கல்வி பயில உள்ளார். இக்காலக்கட்டத்தில் தமிழக பாஜகவின் அன்றாட கட்சிப் பணிகளை கவனிப்பதற்காக, பாஜக மூத்தத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், பாஜக மாநில துணைத் தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி. கனகசபாபதி, பொதுச் செயலாளர்களான எம்.முருகானந்தம், பேராசிரியர் ராம. சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.
அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம்: இந்த அறிவிப்பையடுத்து, சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஹெச். ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், " பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ளார். இதன் காரணமாக, தமிழகத்தில் கட்சியை வழிநடத்த என் தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பாஜக அகில இந்திய தலைமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் தலைமை எதிர்பார்க்கும் வகையில் தமிழகத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த குழு செயல்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் பாஜக முன்னாள் எம்.பி.யும், மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் பெயர் இடம்பெறவில்லை. இதேபோன்று தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், குஷ்பூ உள்ளிட்ட பெண்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டார். இதற்காக அவர் தமது ஆளுநர் பதவி ராஜினாமா செய்தார்.
ஆனால் எம்.பி. தேர்தலில் அவர் தோல்வியை தழுவியதையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்ததாக அப்போது தகவல் பரவியது. இதன் காரணமாகவே கட்சி பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, மேடையில் வைத்தே தமிழிசையை கண்டித்ததாக கூறப்பட்டது. அமித் ஷா, தமிழிசையிடம் அதிகார தொனியில் பேசுவது போன்ற வீடியோ காட்சி சில மாதங்களுக்கு முன் வைரலானது.
பாஜக மகளிரணி தேசியத் தலைவராக பதவி வகித்துவரும் வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார்.
பாஜக செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பூ, தான் வகித்து வந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து அண்மையில் விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.