தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி தொடர் போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறினார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மனித நேயமக்கள் கட்சியின் மாநில தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா வந்தார். அப்போது தென்காசியில் நேற்றிரவு (செப்டம்பர் 22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "தென்காசி மாவட்டத்தில் தொடரும் கனிமவளக் கொள்ளையை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி தொடர் போராட்டங்கள் நடத்தும். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டால் அதை வரவேற்போம். என்கவுன்ட்டர் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தண்டனையை கொடுப்பதற்கு என நீதிமன்றங்கள் இருக்கின்றன."
"அதை காவல்துறை கையில் எடுக்கக் கூடாது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது அபாயகரமான ஒன்று. இது மாநில உரிமையை பறிக்கக்கூடிய செயலாக இருக்கும். இது ஆர்எஸ்எஸ்-இன் எண்ணத்தை பாஜக அரசு செயல் படுத்துவதாக அமைந்துள்ளது."
"புளியங்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்க வேண்டும். தென்காசி மாவட்ட பகுதிகளில் வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவிப்பது தொடர்ந்து வருகிறது. வடகரை உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் வன விலங்குகள் புகுந்து வருகிறது. எனவே வனத்துறையில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்குரிய வாகன வசதி, உபகரண வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்க வேண்டும்."
"கன்னியாகுமரியில் அணுக் கனிமச் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு மக்கள் கருத்தை கேட்பதற்கான கூட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், சுற்றுப்புற மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கும். எனவே, இத்திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு, தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்."
இதையும் படிங்க: நேற்று கைது இன்று என்கவுண்டர்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் அதிரடி..!
"வக்பு வாரிய திருத்தச் சட்டம் சிறுபான்மையினருக்கான உரிமையை பறிக்கும்ச் சட்டமாக உள்ளது. இந்த திருத்தச் சட்டத்தை கண்டித்து இசுலாமிய அமைப்புகள் செப்டம்பர் 27ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்துகின்றன. முஸ்லிம்களுக்கான 3.5% இட ஒதுக்கீட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பயனடைந்தவர்கள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்," என்று கூறினார்.
இப்பேட்டியின்போது மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட் கான், தலைமை செயற்குழு உறுப்பினர் ஹுசைன் மன்பஈ, மாவட்டத் தலைவர் முகமது யாகூப், மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹ்மான், சலீம் ஆகியோர் உடனிருந்தனர்.