தேனி: தேனியில் பல்வேறு கட்சியினரைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சி சுமார் 12.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
இன்று (02.08.2024) தேனியில் திண்டுக்கல் மண்டலம், தேனி கிளை போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நிலையத்தில் டிஎன்எஸ்டிசி - ஐஎன்டியுசி பெயர் பலகையை திறந்து வைத்தேன்.
— Selvaperunthagai K (@SPK_TNCC) August 2, 2024
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.டி.மணிகண்டன் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.… pic.twitter.com/sB9wXVAMEh
இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவராக மேடையில் பேசி வந்திருந்தனர். அப்போது, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு உணவு வழங்குவதாக கூறப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறத் தொடங்கினர். இதனால் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மேடையில் பேசும்போது பல இருக்கைகள் காலியாக இருந்தது.
இதனை அறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள், உணவுகளை தற்போது கொடுக்க வேண்டாம் நிகழ்ச்சி முடிந்த பின்பு கொடுக்கலாம் எனக் கூறினர். இதனால் காலையில் இருந்து காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து உணவும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் எனக் கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கின்றது. அதனை மேலும் பலப்படுத்த மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறோம். இன்னும் இரண்டு மாவட்டங்கள் மட்டும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியது உள்ளது.
வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் பாஜக அரசியல் செய்து வருகிறது. நிலச்சரிவு ஏற்படும் முன்பே தெரிந்திருந்த அமித்ஷா அந்த மக்களை பாதுகாக்க ஏன் மத்திய கமாண்டோ படைகளை அனுப்பவில்லை? ஏன் பொதுமக்களிடம் வெளிப்படையாக சொல்லவில்லை? இதிலும், பாஜக அரசியல் செய்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சட்டமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். எங்கெங்கெல்லாம் கட்சிக்கு செல்வாக்கு இருக்கின்றதோ அங்கு போட்டியிடுவோம்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: நான்கு நாட்களாக ஆற்றின் இடையே சிக்கித் தவிக்கும் நாய்.. ட்ரோன் மூலம் உணவளிக்கும் அரசு! - DOG IN METTUR DAM FEED BY DRONE