சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரத்தையும் தருகிறது. மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல என்று மாவட்ட ஆட்சியர் மறுத்திருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் கள்ளச்சாராயம் குடித்துதான் உயிரிழந்திருக்கிறார்கள் என்று வேதனையுடன் கூறுகிறார்கள்.
கடந்த ஆண்டு மே 20ம் தேதி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 நபர்கள் உயிரிழந்து ஒரு வருடத்திற்குள் மேலும் அதேபோன்று துயரமான சம்பவம் நடந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
தொடர்ச்சியாக விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், அதை விற்பதனால் உயிர் பலி ஆவதும் தொடர்கதையாகவுள்ளது. கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்கள், அதனை விற்பவர்கள் மீது அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
சிபிசிஐடிக்கு மாற்றினால் போதுமா?:மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் முன் காப்போம் என்றவர்கள், வந்த பின் பதறுவது தான் திராவிட மாடலோ? CBCID க்கு வழக்கை மாற்றிவிட்டால் நடந்த கொடுமை மறைந்துவிடுமோ? மறந்து விடுமோ? சாராய சாவுகள் அதிகரித்து வரும் நிலை தமிழகத்தின் மானக்கேடு அல்லவா?
இழந்த உயிர்களுக்கு விலை கொடுக்க முடியுமா? ஒரு பக்கம் அரசே விற்கும் மதுவினால் உண்டாகும் போதையில் நடக்கும் மதுக் கொலைகள், மறு பக்கம் சட்ட விரோத சாராய சாவுகள். எங்கே போகிறது தமிழகம்? போதைக்கு அடிமையாகும் மதுவை தடை செய்யுமா திராவிட மாடல் அரசு?” என திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.