டெல்லி: டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில், விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜயதாரணி, "பாஜகவில் இணைவதை பெருமையாக கருதுகிறேன். சிறிய வயதில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் இருந்த நான் வேறு எந்த கட்சிக்கும் செல்லவில்லை. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது. அதனால் அவருடன் சேர்ந்து பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளேன்" இவ்வாறு கூறினார்.
முன்னதாக தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளதாக கூறி விஜயதாரணி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் திட்டமிட்டே பாஜக அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லாமல் தடுத்து வருகிறது என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
2011, 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் விளவங்கோடு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட விஜயதாரணி திடீரென பாஜகவில் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு செல்வப்பெருந்தகை அந்த பொறுப்புக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காங்கிரஸ் - ஆம் ஆத்மி தொகுதிப் பங்கீடு என்ன? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!